தமிழ்நாடு

"எனக்கு திருநாவுக்கரசை தெரியாது" காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்

"எனக்கு திருநாவுக்கரசை தெரியாது" காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்

webteam

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளனர். இச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் காவல்துறை முழுமையான விசாரணை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது. இதன் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. 

இந்நிலையில் பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் கொடூர வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி காவல் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். 
அந்த சம்மனில் வருகிற 25 ஆம் தேதிக்குள் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மயூரா ஜெயகுமார் செய்தியாளர்கள் சந்தித்தார். அதில் அவர், “டெல்லி மற்றும் சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு கோவை வந்த என்னை, தொழிலதிபர்கள், வியாபாரிகள் என பல தரப்பினர் சந்தித்தனர்.சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் பிப்ரவரி 12ஆம் தேதி திருநாவுக்கரசை பொருத்தவரை, பொள்ளாச்சியில் இல்லையென்றும், கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தந்தையுடன் திருநாவுக்கரசு எனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்ததாக சிபிசிஐடி விசாரணையில் சொல்லியுள்ளார். அதனடிப்படையில் எனக்கு நேற்று இரவு சம்மன் வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு திருநாவுக்கரசை தெரியாது. சிபிசிஐடி புகைப்படம் காண்பிக்கும் போதுதான் எனக்கு திருநாவுக்கரசை தெரியும். எனக்கு எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.