தமிழ்நாடு

வைதீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை இல்லை- உயர்நீதிமன்றம்

வைதீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை இல்லை- உயர்நீதிமன்றம்

jagadeesh

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஏப்ரல் 29ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவலைச் சுட்டிக்காட்டி, இந்த கும்பாபிஷேக விழாவுக்கு தடை விதிக்கக்கோரியும், கும்பாபிஷேகத்தை தள்ளிவைக்கக்கோரியும், தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த கும்பாபிஷேகத்துக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், 600 குருக்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளதாகவும், 144 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜை நடைபெற இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது . உத்தரபிரதேசத்தில் கும்பமேளா நிகழ்வில் ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .

அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், கோயில் ஊழியர்களை வைத்தே கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும் என்றும், கும்பாபிஷேக நிகழ்வை நேரடியாக யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இதை ஏற்று கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் விதிகள் மீறப்பட்டால் அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

கும்பாபிஷேக நிகழ்வை கண்காணிக்க கண்காணிப்பாளர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.