தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: மீண்டும் பள்ளிக்கு செல்லும் சீர்காழி மாணவன்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: மீண்டும் பள்ளிக்கு செல்லும் சீர்காழி மாணவன்

kaleelrahman

சீர்காழி அருகே தாய் தந்தையை இழந்ததால் படிப்பை துறந்து குடும்பத்தை காப்பாற்ற பனங்கிழங்கு விற்பனை செய்த மாணவன் புதியதலைமுறை செய்தி எதிரொலியாக இன்று பள்ளியில் சேர்ந்தார். அரசு பள்ளியில் அனைத்து பொருட்களும் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் சுனாமி நகரை சேர்ந்தவர் இந்திராணி 60. இவரது மகன் முருகவேல்-இளவரசி தம்பதியருக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசி உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் அதுவே பாதிப்பாகி முருகவேலும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்தார்.


இந்நிலையில் இவரது மகன்களான முத்தரசன் (16. முத்துவேல் (14). ஆகிய இரண்டு சிறுவர்களும் தங்களது பாட்டி இந்திராணியின் பாதுகாப்பில் உள்ளனர். தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானதால் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த முத்தரசன் தனது படிப்பை விட்டு விட்டு தந்தையை கவனித்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது தந்தை இறந்துவிட்டார். இதனால் குடும்பத்தின் பாரம் முத்தரசன் மீது இறங்கியது. குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியின்றி பனங்கிழங்கு விற்பனை செய்ய துவங்கினார்.

பனங்கிழங்கு விற்கச் செல்லும் முத்தரசன், தன்னுடன் படித்த சக மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை கண்டு தானும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என கடந்த சில நாட்களாக பாட்டியிடம் சொல்ல நோட்டு, புக், பேனா கூட வாங்க வழியின்றி சிறுவனது ஆசையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறார் மூதாட்டி இந்திராணி. இந்நிலையில் சிறுவன் முத்தரசன் காலையும், மாலையும் பனங்கிழங்கு விற்று தனது படிப்பை தொடர்வேன் என்று தெரிவித்தது குறித்து கடந்த 14 இம் தேதி புதிய தலைமுறையில் செய்தி வெளியானது.


இதனைக் கண்ட தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் மாணவன் முத்தரசனுக்கு ரூபாய் 30 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அந்த நிதியுதவியை பெற்ற முத்தரசன் எம்.பி-க்கு நன்றி தெரிவித்ததுடன் இன்று முதல் பனங்கிழங்கு விற்பனையை கைவிட்டு பள்ளிக்கு செல்வதாகவும் நன்றாக படிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாணவன் நிலை குறித்து அறிந்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் நடராஜன் மாணவன் முத்தரசனை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியை தமிழரசி முன்னிலையில் பள்ளியில் சேர்ந்துக் கொண்டனர். மேலும் பள்ளிச்சீருடை, புத்தகம், புத்தகபை, எழுது பொருட்கள் அனைத்தும் மாணவனுக்கு வழங்கப்பட்டது. மேற்கொண்டு தேவையான உதவிகளையும் செய்வதாக தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் உறுதியளித்தனர்.