மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமங்களை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கல்லாம்பாளையம், தெங்குமரஹாடா என்ற இரு கிராமங்களைச் சுற்றிலும் மாயாறு ஓடிகிறது. இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது கிராமங்களை விட்டு வெளியேற ஒரே போக்குவரத்து வசதி பரிசில் பயணம் மட்டுமே.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்துள்ளது. இதனால் பரிசில் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகி உள்ளது. இதன் விளைவாக கல்லாம்பாளையம் மற்றும் தெங்குமரஹாடா கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட வெளியேற இயலாமல் தவித்து வருகிறார்கள்.
அதே போல் வெளியூர்களுக்கு சென்றவர்கள் தங்களது கிராமங்களுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். வெள்ளக்காலங்களில் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்க மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.