தமிழ்நாடு

ரேஷனில் மசூர் பருப்பு கொள்முதல் தடை நீக்கம்

ரேஷனில் மசூர் பருப்பு கொள்முதல் தடை நீக்கம்

Rasus

ரேஷன் கடைகளில் வினியோகிப்பதற்காக மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது.

சிவகங்கை கழனிவாசலை சேர்ந்த ஆதிஜெகநாதன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதற்காக மசூர் பருப்பு கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசூர் பருப்பு நச்சுத்தன்மை கொண்டது. இதை சாப்பிட்டால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே, மசூர் பருப்பு கொள்முதல் செய்ய அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும், மசூர் பருப்பு கொள்முதல் டெண்டர் அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பருப்பின் தரத்தை ஆய்வு செய்வதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. அந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பருப்புகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டே விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள், பருப்பு கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், கொள்முதல் செய்யப்படும் மசூர் பருப்பில் கேசரி பருப்பு உள்ளிட்ட எவ்வித கலப்படமும் இருக்கக்கூடாது. துவரம் பருப்பில் எவ்விதமான செயற்கை நிறமூட்டிகளும் கலக்கக்கூடாது. முக்கியமாக பல கட்ட ஆய்வுகள் மூலம் மசூர் பருப்பின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.