சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஓபிஎஸ் அணியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியின்போது அவர்,
“திருச்சியில் கடல் இல்லாத குறையை போக்க மக்களும், தொண்டர்களும் அலை கடலென திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். 114 சாதிகளில் ஒரு சாதிக்கு மட்டும் சலுகை அளிக்க வேண்டாம் என இட ஒதுக்கீட்டின் போது ஓபிஎஸ் சொன்னதை கேட்காமல், இபிஎஸ் நடந்து கொண்டதால் தான் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டிய அதிமுக தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுகவில் இருந்து கொண்டு தன்னுடைய சாதிக்காரர்களுக்கு ஈரோடு இடைத்தேர்தலில் வாக்களிக்க ரகசிய கடிதம் எழுதியவர் எடப்பாடி பழனிசாமி.
4.5 ஆண்டுகாலமாக தவறு செய்யும் மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் மீது கூட இபிஎஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. எடப்பாடியின் சர்வாதிகாரப் போக்கை மக்கள் விரும்ப மாட்டார்கள். தொண்டர்களின் கவனத்தை திசை திருப்பவே எடப்பாடி பழனிசாமி மதுரையில் போட்டி மாநாட்டை அறிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் கட்சி விதிகளையும், எடப்பாடியின் சதிகளையும் சரிவர புரிந்து கொள்ளாததால், நீதிமன்றங்கள் ஓபிஎஸ்-க்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனமருது அழகுராஜ்
எடப்பாடியிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுத்து, அபகரிப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்தை காப்போம். ஒருபோதும் எடப்பாடியின் அபகரிப்பு அரசியலை நாங்கள் ஏற்கமாட்டோம்.
இந்த மாநாட்டின் மூலம் ஒதுங்கி இருப்பவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும் அண்ணன் ஓபிஎஸ் வரவேற்கிறார். திருச்சிக்கு கடல் வந்துவிட்டதோ என்று சொல்லும் அளவிற்கு தொண்டர்களின் வருகையால் திருச்சி மாநாடு பிரம்மாண்டமாக அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.