தமிழ்நாடு

91 வயதில் பென்ஷனுக்கு போராடும் சுதந்திரப் போராட்ட தியாகி!

91 வயதில் பென்ஷனுக்கு போராடும் சுதந்திரப் போராட்ட தியாகி!

webteam

91 வயது தியாகிக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென்று உத்தரவை ரத்து செய்யக்கோரும் வழக்கு ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டது.

கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜுலு. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் சுதந்திரப் போராட்ட தியாகி. 15 வயதில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றேன். இதனால் ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டு 3.11.1942 முதல் 5.9.1943 வரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டேன். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஓய்வூதியம் கேட்டு 2013-ல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுத்துறை இணை செயலரிடம் மனு அளித்தேன். நான் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்றதற்கு தியாகிகள் மாயாண்டிபாரதி, பெரியசாமி ஆகியோர் சான்றிதழ் அளித்துள்ளனர். இந்தச் சான்றிதழையும் ஓய்வூதிய விண்ணப்பத்துடன் அனுப்பியிருந்தேன். ஆனால் எனது விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. தொடர்ந்து மனு அளித்தும் பலனில்லை. எனவே ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்து நீதிபதி மகாதேவன் கடந்த நவம்பர் 21ல்  மனுதாரருக்கு 2 வாரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறையின் இணைச்செயலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், “தியாகிகள் ஓய்வூதியம் பெறுவதற்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. மனுதாரர் இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை. பிறந்த தேதி தொடர்பாக அளித்த சான்றிதழ் ஏற்கும்படி இல்லை. உள்ளூர் மருத்துவரிடம் சான்று பெற்றுள்ளார். இது செல்லத்தக்கது அல்ல. அதன்படி பிறந்த தேதியை உறுதிப்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையையும் பூர்த்தி செய்ய மனுதாரர் தவறிவிட்டார். இந்தக் குறைபாடுகளை தனிநீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. 20 ஆண்டுகள் தாமதத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தனி நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு வழக்கினை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.