தமிழ்நாடு

மதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்

மதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்

webteam

மதுரையில் அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டல், திருமண மண்டபங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து திருமண நிகழ்ச்சிகளுக்கான ஆர்டர்களை பெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக பொது நிகழ்ச்சிகள், மத கூட்டங்கள், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, திருமணம் இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பல திருமணங்கள் வீடுகளிலேயே எளிமையாக நடத்தப்படுவதால் திருமண மண்டபங்கள் மற்றும் திருமணத்தை நம்பிய தொழில்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

குறிப்பாக மதுரையில் திருமண மண்டபங்கள் திறக்கப்படாத நிலையில், அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டலில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்கும் திருமண நிகழ்விற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு ஹோட்டலில் ஆவணி முகூர்த்த தினங்கள் அனைத்தும் புக் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஹோட்டலில் அரசின் முறையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதாக சொல்லப்படுகிறது.குறிப்பாக ஹோட்டல் வாயிலேயே கிருமிநாசினி, சோப்பு கொண்டு கை கழுவுதல், தெர்மல் ஸ்கேனிங் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் திருமண நிகழ்ச்சியை நடத்துவபவர்களிடம் முன்கூட்டியே பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய பத்திரத்தில் கையொப்பம் வாங்கப்பட்டு, முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் போன்றவை வழங்கப்படுகிறது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக நாற்காலிகள் 6 அடி இடைவெளி விடப்பட்டும், உணவருந்தும் இடத்தில் நாற்காலிகள் தனிமனித இடைவெளியோடு போடப்பட்டு திருமண நிகழ்வுகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் திருமண மண்டபங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மக்கள் திருமணங்களை நடத்த தமிழ்நாடு ஹோட்டலை நோக்கி படையெடுக்கின்றனர்.