தமிழ்நாடு

கோவை: சிஏஏ போராட்டக்களத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி!

webteam

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, கோவையில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் ஒரு ஜோடி, திருமணம் செய்துகொண்டனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக் கிழமையன்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் தடியடி நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதில், அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இப்போராட்டக்களத்திலேயே ஜோடி ஒன்று திருமணம் செய்துள்ளது. குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்துல்கலாம் என்பவருக்கும், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா ஷீரின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. போராட்டக்களத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடிக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற போராட்டக்களத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.