தமிழ்நாடு

குப்பைகளை அகற்றிய ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள்

webteam

ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், தண்ணீர் பாக்கெட் உட்பட தாங்கள் பயன்படுத்திய பொருட்களின் குப்பைகளை தாங்களே அகற்றி முன்மாதிரியாக திகழ்ந்தனர்.

அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய மாணவர்களைக் கைது செய்த போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தியும் சென்னை மெரினா கடற்கரையில் கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று காலை முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் நீடித்த இளைஞர்கள் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவும் பெருகி வருகிறது. அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளையும் வழங்கி பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்து தன்னெழுச்சியாகப் போராடி வரும் மாணவர்கள் அறவழிப் போராட்டத்துக்கு முன்மாதிரியாக இருப்பதுடன், தாங்கள் பயன்படுத்திய குடிநீர் பாக்கெட்டுகள், உணவு பொட்டலங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகளின் குப்பைகளை தாங்களே சேகரித்தும் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளனர். சுத்தத்தின் அவசியம் குறித்து உணர்ந்துள்ள மாணவர்கள் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையை அசுத்தப்படுத்தக் கூடாது என்ற எண்ணத்துடன் குப்பைகளை தாங்களே சேகரித்து அகற்றி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.