அதிமுக ஆட்சியில் விளம்பரத்திற்காக 110 விதியின் கீழ் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதி ஆதாரங்கள் இல்லாமல் கைவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர்பழனிவேல் தியாகராஜன் பட்டியலிட்டுள்ளார்.
கடந்த 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் சட்ட பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்கள், அவற்றின் நிலை, அதற்கான நிதி ஆகியவை குறித்த முழுமையான அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர்...
அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், இதில் 87 ஆயிரத்து 405 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 167 அறிவிப்புகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
537 திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 76 ஆயிரத்து 619 கோடி ரூபாய் மதிப்பிலான 143 திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி மதிப்பிலான 398 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
2013-14 ஆம் நிதியாண்டில் விருப்ப செலவினத்தை விட 135 சதவீதம் கூடுதலாக 56 ஆயிரத்து 346 கோடி ரூபாய் மதிப்பிலான 292 அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்ததாக குறிப்பிட்டார். இப்படி அறிவித்தால் எப்படி திட்டங்களை நிறைவேற்ற முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...
அரசுப் பணிகளில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அறிவிப்பு, முழுமையாக அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.