என்.சங்கரய்யா முகநூல்
தமிழ்நாடு

என்.சங்கரய்யாவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய 32 தலைவர்களில் ஒருவருமான என். சங்கரய்யா இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய 32 தலைவர்களில் ஒருவர்,

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்,

சுதந்திர போராட்ட தியாகி,

சட்டமன்ற உறுப்பினர்,

சட்டமன்ற தலைவர்,

1936 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்,

மக்களின் குரலாக சட்டமன்றத்தில் திகழ்ந்தவர்,

தமிழக அரசால் தகைசால் விருது பெற்றவர்

- என பல பல பெருமையகளை தன்னகத்தே கொண்டுள்ள மாபெரும் தலைவரான என்.சங்கரய்யா இன்று காலை உடல் நல குறைவால் காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

என்.சங்கரய்யா

எடப்பாடி கே.பழனிசாமி

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே.பழனிசாமி சங்கரய்யா இறப்பு குறித்து தனது இரங்கலை x பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான திரு.சங்கரய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத்தியாகி திரு.சங்கரய்யா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.” என்றுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்

“தமிழகத்தின் மூத்த முதுபெரும் தலைவருமான தோழர் சங்கரய்யா காலமானதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன்.102 வயது வரை நிறைவாழ்வு வாழந்த மாபெரும் மனிதர் இவர்.

திரு. தொல். திருமாவளவன்

தமிழகத்தில் மிகச்சிறந்த தலைவராக மட்டும் அல்லாமல் கொள்கையில் உறுதிமிக்க தலைவராக அனைவருக்கும் வழிகாட்டும் தலைவராக ஆளுமையாக வாழ்ந்தவர். இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர். பொதுவுடமையை வலுப்படுத்திய மனிதர். இவரின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு.”

மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா

“மாபெரும் மூத்த தலைவரும் உழைக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தக்கூடிய தலைவருமானவர் இவர். மனித நல்லிணக்கத்திற்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டவர். இவரின் இறப்பு முழு தமிழகத்திற்கும் இழப்பு.

தன் கல்லூரி பருவத்தில் தேர்வு எழுத கூடிய சூழலில் தேர்வா, விடுதலைப் போராட்டமா என்ற போது தேர்வை புரக்கணித்து விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்று, சிறைக் கொடுமைகளை அனுபவித்த மனிதர். இவரின் இறப்பு தாங்க முடியாத துக்கத்தையும் சோகத்தினையும் அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது.”

கம்யூனிஸ்ட் கட்சி பால பாரதி:

“மிகுந்த அதிர்ச்சியான செய்தி. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரிழப்பு. இடது சாரி கட்சிகளுக்கு, தமிழ்நாட்டின் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் இவரின் இழப்பு பேரிழப்பு. மூத்த தலைவர் என்றாலே தமிழ்நாட்டில் அது சங்கரய்யாதான். தன் இளமை காலம் முதல் முழுமையுமாக தன்னை முழுவதுமாக மக்களுக்காக அர்பணித்து கொண்டவர் இவர். எந்த பிசிரும் தடுமாற்றமும், ஆசையும், பேராசையும் இல்லாமல் தன் கல்லூரி படிப்பில் துவங்கி 102 வயது வரை முழுவதுமாக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர்”

மதிமுக தலைவர் திரு வைகோ:

”அவரை போல வாழ வேண்டும் என்ற எண்ணத்தை லட்சிய வாதிகளுக்கெல்லாம் உருவாக்கி கொடுக்கக்கூடிய அளவிற்கு தன் கல்லூரி பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு சிறைச்சாலைக்கு சென்றவர்.

கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலத்திலிருந்தே 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பல ஆண்டுகள் மாநில செயலாளராக பதவி வகித்து இக்கட்சிக்கு பெருமையும் புகழையும் தேடிக்கொடுத்த வாழ்நாள் போராளி. இவரின் இழப்பு பொதுவுடமை இயக்கத்திற்கு மட்டுமல்ல தமிழக பொது வாழ்வுக்குமே ஏற்பட்ட பேரிழப்பு, இந்திய அரசியலுக்கே பேரிழப்பு” என்று கண்கலங்க தனது அஞ்சலியை பதிவு செய்தார்.

இவர்களை போலவே திமுக ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி. ராமக்கிருஷ்ணன், அதிமுக வைகைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் ஆகியோரும் தங்களது இரங்கலை பதிவு செய்தனர்.

மேலும் பல தரப்பு அரசியல் கட்சி தலைவர்களும் இவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.