தமிழகத்தில் சமீபத்தில் நாய்க்கடி சம்பவம் என்பது பூதாகரமாகியுள்ளது. புதிதாக எழுந்த நிகழ்வாக இதனை பார்க்க முடியுமா, என்றால் கண்டிப்பாக கிடையாது. ஒவ்வொரு நாளும் நாய்க்கடியால் பாதிக்கப்படும் மக்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது குறித்து புதிய தலைமுறையின் மாவட்டச் செய்தியாளர்கள் பல்வேறு தகவல்களை திரட்டினர்.
அதன்படி, மதுரை மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 95 ஆயிரம் பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் 48 ஆயிரத்து 323 பேரும், 2022 ஆம் ஆண்டில் 46 ஆயிரத்து 962 பேரும் நாய்கள் கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 3 பேர் உயிரிந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோல், கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான ஓராண்டில் மட்டும் 51 ஆயிரத்து 209 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் அதிக நாய்க்கடி நிகழ்ந்த மாவட்டங்களில் கடலூரும் ஒன்றாக உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 35 ஆயிரத்து 536 பேர் நாய்க்கடிக்கு ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். சிவகங்கையில் 2023 ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 564 பேரும், 2022 ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 683 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரையில், 2022 ஆம் ஆண்டு 19 ஆயிரத்து 263 பேருக்கும், 2023 ஆம் ஆண்டு 18 ஆயிரத்து 765 பேருக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் நாய்களால் கடிப்பட்டோர் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.