தமிழ்நாடு

லெவல் கிராசிங்குகளால் நிகழும் மரணங்கள்

லெவல் கிராசிங்குகளால் நிகழும் மரணங்கள்

webteam

ஈரோட்டின் மைய பகுதியில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் ரயில்வே லெவல் கிராசிங் செயல்படுவதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். நோயாளிகளை குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாததால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

நகராட்சியாக இருந்த ஈரோடு கடந்த 2008 ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 60 வார்டுகள் ஏற்படுத்தபட்டது. இதில் 60ஆவது வார்டு பகுதியான வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம் உள்பட பகுதிகளி‌ல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் பணிநிமித்தமாக 4 கிலோமீட்டர் தூரம் உள்ள ஈரோட்டின் மையப்பகுதிக்கு வரவேண்டிய நிலை இருக்கிறது. அதற்குள் 3 இடங்களில் ‌அடுத்தடுத்து லெவல் கிராசிங்கை கடக்க நேரிடுவதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

ரயில் செல்லும் நேரங்களில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை காலை நேரங்களில் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இதன் காரணமாக, வேலைக்கு செல்பவர்கள் ,பள்ளி, கல்லூரி மாணவர்கள், நோயாளிகள் என பலதரப்பினரும் காலதாமதத்தால் அவதிக்குள்ளாவதாக கூறுகிறார்கள்.

லெவல் கிராசிங் பிரச்னைக்கு ஒரே தீர்வான மாற்றுப்பாதை திட்டத்தை அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் வெண்டிப்பாளையம், மோளகவுண்டம் பாளையம், கோணவாய்க்கல் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.