மாணிக்கம் தாகூர் புதியதலைமுறை
தமிழ்நாடு

மதுரை விமான நிலைய டோல்கேட்டில் நடக்கும் கொள்ளை.. பயணியின் கோரிக்கைக்கு MP மாணிக்கம் தாகூர் பதில்!

மதுரை விமான நிலைய சுங்கச்சாவடியில் நிர்ணயம் செய்த விலையை விட, கூடுதல் விலை கேட்கும் வடமாநில டோல்கேட் ஊழியர்கள் குறித்து வெளியான வீடியோ..விமான நிலைய இயக்குனர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர்.

யுவபுருஷ்

மதுரை விமான நிலையத்தில் நாள்தோறும் 3,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்யும் பயணிகளுடன் அவர்கள் உறவினர்களும், அதேபோல் மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளை வரவேற்க அவர்களது உறவினர்களும் வருகை புரிவர்

தொடர்ந்து, விமான நிலையத்திற்குள் உள்ளே சென்ற வாகனங்கள் 3 நிமிடத்திற்கு மேல் இருந்தால், கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், மூன்று நிமிடத்திற்குள் வெளியே சென்றால் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் சுங்கச்சாவடி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மதுரை விமான நிலையத்தை பொறுத்தவரை வாகனங்கள் வந்து செல்லும் பாதையில், முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் வரும்போது மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்படும். இதனால் பயணிகள் வாகனங்கள் வந்து செல்வதற்கு தாமதம் ஏற்படுகிறது.

மதுரை விமான நிலைய சுங்கச்சாவடியை வடமாநிலத்தவர் டெண்டர் எடுத்துள்ள நிலையில் , தினசரி மதுரை விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் வாகனங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவு வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

டோல்கேட்டில் பணிபுரியும் வட மாநில ஊழியர்களின் செயல் குறித்து பாதிக்கப்பட்ட நபர், விமான நிலையத்திற்கு சென்றபோது நடந்ததை வீடியோவாக எடுத்துள்ளார். 28 நிமிடங்களுக்கு கட்டணம் எவ்வளவு என்று கேட்டபோது, வடமாநில ஊழியர் முதலில் 60 ரூபாய் என்று கூறுகிறார்.

தொடர்ந்து, 30 நிமிடங்களில் வந்துவிட்டேனே, அந்த பில்லை எடு என்று கேட்டவுடன், வீடியோ எடுப்பதை பார்த்துவிட்டு, 20 ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று கேட்கிறார் அந்த நபர். தொடர்ந்து, பயணி மீது குற்றம்சாட்டுவதுபோல வடமாநில ஊழியரும் வீடியோ எடுக்க முயல்கிறார். பயணிதான் பிரச்னை செய்வதுபோல சித்தரிக்க முயன்ற வடமாநில ஊழியரின் அனைத்து செயல்களையும் கவனமாக வீடியோ எடுத்த பயணி, புகார் சொல்வதாக கூறிவிட்டு செல்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும்,MP மாணிக்கம் தாகூரை டேக் செய்தவர் ஒருவர், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனைப் பார்த்த மாணிக்கம் தாகூரும், விமான நிலைய இயக்குநரிடம் பேசியுள்ளார். தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர்,

”இதுதொடர்பாக விமான நிலைய இயக்குநரிடம் பேசினேன். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இந்த விஷயத்தை வெளியே கொண்டுவந்தவருக்கு எனது பாராட்டுகள். இந்த பகல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.