மாங்காடு பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று இல்லை என கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று இருந்த ரத்தம் செலுத்தப்பட்டது தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி ஒருவர் தனக்கும் எச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “கரு ஏற்பட்ட பின்னர், 45வது நாள் தான் நாங்கள் சிகிச்சைக்கே சென்றோம். அது ஒரு தனியார் மருத்துவமனை. அப்போது அவர்கள் பல சோதனைகளை செய்துகொண்டு வரச்சொன்னார்கள்.
அப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எல்லாம் எனக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என வந்தது. அதன்பின்னர் 5வது மாதம் உடம்பில் ரத்தம் குறைவாக உள்ளது. எனவே நீங்கள் ரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றார்கள். நாங்கள் வசதி இல்லை என்றோம். எனவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து என்னை அனுப்பினர். அங்கு இரண்டு நாட்களுக்கு எனக்கு இரண்டு பாட்டில் ரத்தம் ஏற்றினர். அதன்பின்னர் 10 ஊசி மூலம் குலுக்கோஸ் கலந்த ரத்தம் ஏற்றுவோம் என்றனர். அதன்பின்னர் எடுக்கப்பட்ட ரத்த சோதனைகளில் எனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக வந்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பதிலளித்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் முதல்வர் வசந்தா மணி, “சோதனை முடிவுகள் ஒரு வேளை தவறாக இருக்கலாம் என நாங்கள் எச்.ஐ.வி சோதனையை மறுபடி செய்தோம். அப்படி செய்து பார்க்கும்போது அவர்களுக்கு எச்.ஐ.வி இருப்பது உறுதியானது. ஆனால் அவர்கள் ஏற்கெனவே பரிசோதனை செய்த உண்மை ஆவணங்களை சமர்பிக்கவில்லை. அதன்பின்னர் நாங்கள் பதிவு செய்து மருத்துவம் கொடுத்தோம். பின்னர் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை.
பின்னர் டிசம்பர் மாதம் எங்களுக்கு உயர் அதிகாரிகள் தரப்பிலிருந்து அறிக்கை வந்தது. அதில் உங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது அதுதொடர்பாக விசாரியுங்கள் என கூறப்பட்டிருந்தது. அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நாங்கள் அப்பெண்ணுக்கு கொடுத்த அனைத்து ரத்தமுமே எச்.ஐ.வி தொற்று இல்லாதது தான் என்பது உறுதியாகியுள்ளது. எங்கள் மருத்துவமனையில் இருந்து அவர்களுக்கு எச்.ஐ.வி பரவுவதற்கான வாய்ப்பே இல்லை.