medical theft  file image
தமிழ்நாடு

மெடிக்கல் ஷாப்பில் கைவரிசை காட்டிய பலே திருடன்.. காத்திருந்து மடக்கிப்பிடித்த மருந்தக ஊழியர்கள்!

மெடிக்கல் ஷாப்பில் தொடர்ச்சியாக மருந்துகளை திருடிய நபரை பிடித்து சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தோடு கடை ஊழியர்களே காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது.

யுவபுருஷ்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மெடிக்கல் கடையில் கடந்த சில நட்களாக இரவு நேரங்களில் 30,000 முதல் 40,000 ரூபாய் மதிப்பிலான மாத்திரைகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் உள்ளிட்டவைகள் காணாமல் போவது தெரியவந்துள்ளது.

இது கணக்கு பார்க்கும்போது தெரியவந்த நிலையில், சந்தேகமடைந்த ஊழியர்கள் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, வாடிக்கையாக வரும் நபர் ஒருவர் மருந்தகத்திற்கு அதிகாலை மற்றும் மதிய நேரங்களில் மருந்தகத்தில் உள்ள ஊழியர்களிடம் பேச்சு கொடுக்கிறார். அவர்களின் கவனத்தை திசைதிருப்பி, கவுண்டருக்கு அருகே வைக்கப்பட்டுள்ள பொருட்களை பைகளில் போட்டு செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து உஷாரான மருந்தக ஊழியர்கள், கண்காணித்து கொண்டிருந்த போது, பெண் ஒருவருடன் மீண்டும் வந்துள்ளார் அந்த நபர். மேலும், தான் கண்காணிக்கப்படுவது கூட தெரியாமல் பொருட்களை திருடிய நிலையில், ஊழியர்கள் அந்த நபரை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து திருவள்ளூர் நகர காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர், அப்பல்லோ பார்மசியில் வாடிக்கையாக திருடிய நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் திருவள்ளூர் நகராட்சி அருகே உள்ள தபால் நிலையம் பின்புறம் வசிக்கும் ஸ்டீபன் ஜெபராஜ் என்பது தெரியவந்தது. உடன் வந்த பெண் யார் என்பது குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

மருந்தகத்திற்க்கு வந்து ஊழியரிடம் தலைவலி மாத்திரை கேட்டுவிட்டு, கவுண்டருக்கு வெளியே உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து பொருட்களை எடுத்து பையில் போட்டுக்கொண்டு ஒரு பொருளை மட்டும் டேபிள் மேல் எடுத்து வைத்து பில் போடும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மருந்து திருடிய நபரிம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.