ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சாமுண்டீஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் சாமுண்டீஸ்வரிக்கும் சதீஷ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்த நிலையில், ஆற்காடு பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர்தான், தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாகக் கூறி சதீஷ்குமார், ஆற்காடு நகர காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதும், புகார் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், பெட்ரோல் கேனை மறைத்து கொண்டுச் சென்றுள்ளார் சதீஷ்குமார்.
கூட்டத்தில் பங்கேற்ற அவர், பொதுமக்கள் முன்னிலையில் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, துப்பாக்கி வடிவில் இருந்த லைட்டரை வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். இதனைப் பார்த்த பொதுமக்கள், அங்குமிங்குமாக அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
அப்போது, உடனடியாக விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். புகார் கொடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.