கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் பரசுராமா. 30 வயதான இவர், தனது மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் (ஸ்கூட்டி) கர்நாடக மாநிலத்தில் இருந்து, திண்டுக்கல், வத்தலகுண்டு வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, மீண்டும் தனியாக ஊர் திரும்புவதற்காக கர்நாடகா கிளம்பி உள்ளார். இவர், கூகுள் மேப் பார்த்தபடி வத்தலகுண்டு வழியாக சென்றபோது, இரவில் வழி தவறி வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே ஆற்றின் சகதியில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரை வழி தெரியாமல் சகதியின் சிக்கிக் கொண்டு மெயின் ரோட்டிற்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்துள்ளார். பின்னர் செய்வதறுயாது , கர்நாடக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அரையைத் தொடர்புகொண்ட கர்நாடகா போலீசார் பரசுராம வழி தவறிச் சென்று சேற்றில் சிக்கிக்கொண்டு மீண்டு வர முடியாமல் 5 மணி நேரமாகத் தவித்துக் கொண்டிருப்பது பற்றித் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வத்தலகுண்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா, பட்டிவீரன்பட்டி காவல் நிலைய இரவு ரோந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் சுமார் ஒருமணி நேரத்திற்ஜ்கு மேலாக பரசுராமைத் தேடி அலைந்துள்ளனர்.
பின்னர் அவர் இருந்த இடத்தை கண்டுபிடித்து, மூன்று சக்கர வாகனத்தில் ஆற்று சகதியில் சிக்கியவரை, பத்திரமாக மீட்டு பட்டிவீரன்பட்டி காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளானர். அங்கு அவருக்கு உணவு வழங்கி அவரை பத்திரமாக அனுப்பிவைத்துள்ளனர்.
இத்தகவல் தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கர்நாடக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து கர்நாடக போலீசார் தமிழ்நாடு போலீசாருக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்துள்ளனர்.