தமிழ்நாடு

"செல்பி" மோகத்தால் அடையாற்றில் விழுந்த இளைஞர்

"செல்பி" மோகத்தால் அடையாற்றில் விழுந்த இளைஞர்

jagadeesh

"செல்பி" எடுக்க முயன்ற போது அடையாற்றில் தவறி விழுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாதுரியமாகச் செயல்பட்டு விழுந்த நபரை உயிருடன் மீட்டனர்.

சென்னை அடையாறு திரு.வி.க மேம்பாலத்திலிருந்து இளைஞர் ஒருவர் கம்பி மீது ஏறி நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது தவறி அடையாற்றில் விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாலையில் சென்றவர்கள் தீயணைப்புத் துறைக்குத் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்ததும் மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து வண்டி விரைந்து சென்றது. தீயணைப்பு வீரர்கள் அடையாற்றில் இறங்கி அந்த இளைஞரை மீட்டனர். மேலும் தகவல் அறிந்து அடையாறு காவல்துறையினர் அங்கு வந்து அந்த இளைஞரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் கொளத்தூரை அடுத்த விநாயகபுரம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த சதீஷ் (33) என்பது தெரிந்தது.

அடையாறு திரு.வி.க மேம்பாலத்தின் நடுவில் மேலே நின்று செல்பி புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது தவறுதலாகக் கையில் வைத்திருந்த செல்போன் ஆற்றில் விழுந்து விட்டது. அதனைப் பிடிக்க முயன்றபோது சதீஷ் அடையாற்றில் விழுந்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சதீஷூக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அடையாறு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.