கைதான மதன்குமார் - ஆசிரியை ரமணி புதிய தலைமுறை
தமிழ்நாடு

தஞ்சாவூர்: பள்ளி வளாகத்திலேயே கத்திக்குத்துக்கு ஆளான ஆசிரியை; இளைஞர் கைது!

தஞ்சாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கத்திக்குத்துக்கு ஆளான ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தஞ்சாவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியரை பள்ளி வளாகத்திலேயே வைத்து இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சின்னமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணி, வயது 26. இவர், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பணிக்கு சேர்ந்து நான்கு மாதங்கள் ஆனதாக கூறப்படுகிறது. இவரை அதே கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவர் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் மதன்குமார். அப்போது ரமணியின் பெற்றோர் மதனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர். ரமணியும் மதனை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மதன்குமார் இன்று காலை (20.11.2024) ரமணி வேலை செய்யும் பள்ளிக்கே சென்று, அவர் அமர்ந்திருந்த அறையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போக, ரமணியை சரமாரியாக தாக்கியுள்ளார் மதன்குமார். பிறகு தான் வைத்திருந்த கத்தியால் ரமணியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனையடுத்து, சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே ரமணி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதனை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆசிரியர் மரணத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்தான தன் பதிவில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.