தமிழ்நாடு

சில்லறை பிரச்னையால் மன உளைச்சல்: பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய பயணி!

சில்லறை பிரச்னையால் மன உளைச்சல்: பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய பயணி!

webteam

சில்லறை இல்லாததால் பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட நபர் ஒருவர், பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னையில் நடந்த இச்சம்பவத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். சென்னை தி.நகரில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அவரை பார்ப்பதற்காக, அவர‌து மகன் சென்னை வந்திருக்கிறார். பின்னர், சென்ட்ரல் ரயில்நிலையம் சென்று மகனை ஊருக்கு வழியனுப்பிய அவர், வீடு திரும்புவதற்காக  மாநகரப் பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் அவரிடம் 500 ரூபாய் நோட்டு மட்டுமே இருந்திருக்கிறது. சில்லறை இல்லாததால் டிக்கெட் கொடுக்க மறுத்த நடத்துநர், கமலக்கண்ணனை அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டுள்ளார். அடுத்தடுத்து வந்த பேருந்துகளிலும், சில்லறை பிரச்னை காரணமாக, கமலக்கண்ணனை ஏற்ற நடத்துநர்கள் மறுத்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த அவ, வேறு வழியின்றி ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோ தேனாம்பேட்டை அருகே சிக்னலில் நின்றபோது கமலக்கண்ணனை முதலில் இறக்கிவிட்ட 23சி பேருந்தும் அதே சிக்னலில்தான் நின்றுள்ளது. அதைக் கண்ட அவர் ஆட்டோ‌வில் இருந்து இறங்கி அருகில் இருந்த கல்லை எடுத்து, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், சில்லறைக்காக வன்முறையை கையில் எடுத்த கமலக்கண்ணனை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மாநகர பேருந்துகளில் அதிகமாக சில்லறை பிரச்னைகளை நிலவுவதாகவும், அவசரமாக வரும் பயணிகள் சில நேரம் சில்லறை வைத்துக்கொள்ளமுடியவில்லை என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் சில்லறை பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.