தமிழ்நாடு

மாணவர்களை வைத்து டெங்கு விழிப்புணர்வா? - வாக்குவாதத்தில் பெண் அதிகாரியை கன்னத்தில் அறைந்த இளைஞர்!

மாணவர்களை வைத்து டெங்கு விழிப்புணர்வா? - வாக்குவாதத்தில் பெண் அதிகாரியை கன்னத்தில் அறைந்த இளைஞர்!

webteam

மாவட்ட உதவி திட்ட அலுவலரை கன்னத்தில் அறைந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் உள்ளது கூணான்டியூர் கிராமம். இப்பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் மக்களிடையே டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் உத்தரவை அடுத்து, துணை ஆட்சியர் மற்றும் உதவி திட்ட அலுவலர் சுசிலா ராணி மேற்பார்வையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கள ஆய்வு பணிகள் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பணியில்  பள்ளி மாணவர்கள் மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், ''பள்ளி மாணவர்களை எந்த உத்தரவின் அடிப்படையில் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துகிறீர்கள்'' என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ''நீங்கள் செய்ய வேண்டிய வேலையை ஏன் மாணவர்கள் மீது திணிக்கிறீர்கள், இதனால், அவர்களின் கல்வி பாதிக்காதா'' என்று கேட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்த   மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுசிலா ராணி, தமிழக அரசின் உத்தரவின் பேரில் பள்ளி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு செய்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக இளைஞர் பிரபாகரனுக்கும், உதவி திட்ட அலுவலர் சுசிலா ராணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தங்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை பிரபாகரன் தன் செல்போனில் படம்பிடித்ததாக தெரிகிறது. அப்போது செல்போனை சுசிலா ராணி தட்டிவிட்டுள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், சுசீலாவை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் காயமடைந்த சுசீலா, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில்  மேச்சேரி போலீசார் பிராபகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.