சிவகங்கையில் சட்டக் கல்லூரி அமைக்கக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
காரைக்குடியில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். தற்போதுவரை அதுபற்றிய அடுத்தகட்ட அறிவிப்போ, அதற்கான பணிகளோ தொடங்கப்படாததை கண்டித்து, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரை சேர்ந்த கலைச் செல்வம் என்பவர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். இவர் முன்னதாக சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டவர் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: சிவகங்கை: கடந்த ஒரு வாரத்தில் 101 ரவுடிகள் கைது; நடவடிக்கை தொடருமென மாவட்ட எஸ்.பி. உறுதி
முதல்வர் ஸ்டாலின் அறிவித்தப்படி, சட்டக் கல்லூரியை காரைக்குடி மாவட்ட தலைநகரான சிவகங்கையில் அமைத்து தர வேண்டும் என்று கோரி கலைசெல்வம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து கோரிக்கை பாதகையை ஏந்தி உண்ணாவிரதம் இருக்க முயன்றார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், அனுமதியின்றி உண்ணாவிரதமிருந்த காரணத்திற்காக கலைசெல்வத்தை கைது செய்து அழைத்துச் சென்றனர்.