தமிழ்நாடு

அவசரகால செயினை இழுத்தும் நிற்காமல் சென்ற ரயில்..! பாசத்தில் துடிதுடித்த நண்பர்கள்..!

அவசரகால செயினை இழுத்தும் நிற்காமல் சென்ற ரயில்..! பாசத்தில் துடிதுடித்த நண்பர்கள்..!

Rasus

பொதிகை அதிவிரைவு ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் அவரது நண்பர்கள் விழுந்த நண்பரை காப்பாற்றுவதற்காக, அவசரமாக ரயில் செயினைப் பிடித்து இழுத்தும் ரயில் நிற்காமல் சென்றுவிட்டது.

தென்காசி அருகில் இருக்கும் இலஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் காக்கும் பெருமாள். இவர் சென்னை பூந்தமல்லியில் தன் நண்பர்களுடன் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நேற்று ஊருக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பொதிகை அதிவிரைவு ரயிலில் தன் நண்பர்களுடன் பயணித்ததார் காக்கும் பெருமாள். ரயில் செங்கல்பட்டை தாண்டி ஒட்டிவாக்கம் அருகே சென்றபோது ரயில் படிக்கட்டு பகுதியில் நின்றிருந்த அவர் தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் பதறிப்போன காக்கும் பெருமாளின் நண்பர்கள் உடனடியாக ரயில் செயினை பிடித்து இழுத்தனர். ஆனால் ரயில் நின்றபாடில்லை. தொடர்ச்சியாக அருகில் இருந்து பெட்டிகளில் இருந்தும் சக பயணிகள் அவசரத்திற்கு இழுக்கப்படும் ரயில் செயினை இழுத்தனர். ஆனால் ரயில் நிற்கவேயில்லை. சுமார் 75 கீ.மீட்டருக்கு அப்பால் சென்று ரயில் வழக்கம்போல விழுப்புரத்தில் நின்றது. பின்னர் அங்கிருந்து சுமார் 75 கி.மீ பேருந்தில் பயணம் செய்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் தன் நண்பனை காப்பாற்ற சென்றுள்ளார் காக்கும் பெருமாளின் நண்பர். தற்போது வரை காக்கும் பெருமாளை போலீசார் உள்பட அவரது நண்பர்களும் தேடி வருகின்றனர்.

பொதுவாக ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு செயின் பொருத்தப்பட்டிருக்கும். எதாவது அசம்பாவித சம்பவங்களோ விபத்தோ ஏற்பட்டால் பயணிகள் அந்த ரயில் செயினை பிடித்து இழுக்கலாம். ரயிலும் நிற்கும். ஆனால் பொதிகை அதிவிரைவு ரயில் நிற்காமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ரயில் பெட்டியில் ஏதேனும் தீ விபத்து நேரிட்டு அப்போதும் ரயில் செயினை இழுத்து ரயில் நிற்காமல் சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்..? என ரயில் பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.