உயிரிழந்த சக்திவேல், அவருடைய மனைவி PT WEB
தமிழ்நாடு

சென்னை : கஞ்சா அடித்ததை தட்டிக்கேட்ட நபர் வெட்டிக் கொலை ; கதறிய மனைவி!

சென்னையில் கஞ்சா அடித்ததைத் தட்டி கேட்ட நபரை, நான்கு இளைஞர்கள் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல் ராஜ்

சென்னை அடுத்த, புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(47). இவர் வசிக்கும் பகுதியில், கடந்த வாரம் மூன்று இளைஞர்கள் கஞ்சா போதையில் ஆபாசமாகப் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சக்திவேல் 3 பேரையும் கண்டித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர்கள்

இந்தநிலையில் சக்திவேல் மீது கோபத்தில் இருந்த இளைஞர்கள், கடந்த 3-ம் தேதி இரவு சக்திவேல் தனியாக டீ குடிக்கச் செல்வதை அறிந்து, அங்குச் சென்று அவரை கொடூரமாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த சக்திவேலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்

இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (20), அஜீத்குமார் (21), சிலம்பரசன் (24), விக்கி(22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள்

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சக்திவேலின் மனைவி, "அந்த நான்கு பேரும் கத்தி, கல்லு, அரிவாளுடன் வந்து நடுரோட்டில் வைத்து என கணவரை வெட்டிட்டு போனாங்க. என்னால இனிமே வெளியில்போக முடியாது. உயிர் பயத்தை காட்டுவாங்க. நான் தனியாக நிற்கிறேன், மார்க்கெட்க்கு காய்கறி வாங்க போனால் கூட என்னையும் வெட்டிவிடுவாங்க. அந்த பசங்க யாருனே எங்களுக்கு தெரியாது. எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த முன் விரோதமும் இல்லை. எனக்கு குழந்தையும் இல்லை. என்னுடைய கணவரும் இல்லை. கடைசி உயிர் என்னுடைய கணவரின் உயிராகவே இருக்கட்டும். இனிமேல் யாருக்கும் இதுபோல் நடக்க கூடாது. கஞ்சாவிற்கும் என்னுடைய கணவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவர் ஒரு அப்பாவி கஞ்சாவை முதலில் ஒழிக்க வேண்டும்" என்றார்.