மதுரை பெருங்குடி அருகே சார்பு ஆய்வாளர் போல் நடித்து ரூபாய் 4500 வழிப்பறி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரிய ஆலங்குளத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, அவர்களை வழிமறித்த ஒருவர் காவலர் போல நடித்து 4500 ரூபாயை பறித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த வேல்முருகன் தம்பதியர் பெருங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த திருமங்கலம் டிஎஸ்பி தனிப்படை அமைத்து குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இந்நிலையில் இன்று காலை தனிப்படைக்கு படி ராமன்( 43 ) என்பவர் கப்பலூர் பகுதியில் இருந்து தப்ப முயற்சிக்கும் போது பிடிப்பட்டதாக தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ராமனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ராமன் திருமங்கலம் தாலுகா காண்டை அருகே உள்ள எரம்மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் போலீஸார் போல வேடமணிந்து தேனி, விருதுநகர், இராமநாதபுரம் தூத்துக்குடி மற்றும் கேரளாவில் உள்ள மூணாறு பகுதிகளிலும் வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்னர் இவர் திருமங்கலம் ஆட்டு சந்தையில் காவலர் உடையணிந்து வசூல் வேட்டையாடிய போது திருமங்கலம் தாலுகா போலீஸார் இவரை கைது செய்ததும் தெரிய வந்தது. தனது போலியான நடவடிக்கைகளால் டூப் அல்வா பீட்டர் ராமன் என அழைக்கப்பட்டு வந்த ராமனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.