கைது செய்யப்பட்ட வெள்ளத்துரை புதிய தலைமுறை
தமிழ்நாடு

தம்பியை கொலை செய்த அண்ணன் கைது ; 7 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியது எப்படி? - அதிர்ச்சி பின்னணி

தென்காசியில் தம்பியைக் கொலை செய்த அண்ணனை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரை கடந்த 2016-ஆம் ஆண்டு மர்மநபர்கள் கொலை செய்து கோணிப்பையில் கட்டி கிருஷ்ணாபுரம் பாலத்திற்குக் கீழ் போட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

உயிரிழந்த கருப்பையா

இந்தநிலையில் குற்றவாளி பற்றி எந்தவித துப்பும் கிடைக்காமல் இருந்து வந்ததால், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு இருந்து வந்துள்ளது. பின்னர் தென்காசி மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளியைத் தேடி வந்தனர்.

இதனையடுத்து கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் கடந்த சில மாதங்களாக ஊரில் வசிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் கரடிகுளம் பகுதியில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சுற்றி வளைத்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. வெள்ளத்துரையும், கருப்பையாவும் அண்ணன் தம்பி என்பதும் இருவருக்கும் சொத்து பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் 2016-ஆம் ஆண்டு சொத்து பிரச்னை விஸ்வரூபம் எடுத்தவுடன், வெள்ளத்துரை அவரது தம்பி கருப்பையாவை தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார். வந்த இடத்தில் மீண்டும் சொத்துத் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரமடைந்த வெள்ளத்துரை அங்கே கிடந்த கம்பால் கருப்பையாவின் தலையில் பலமாகவும் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் கருப்பையா. உயிரிழந்த அவரை சாக்கு மூட்டையில் கட்டி கிருஷ்ணாபுரம் பாலத்திற்கு அடியில் வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து போலீசார் வெள்ளத்துரையை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொந்த தம்பியை சொத்துக்காக கொலை செய்த நபரை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.