கடத்தல் வழக்கில் கைதானவர் பிரகதீஸ்வரன் சிவஞானம்
தமிழ்நாடு

காதலனின் பைக்கிலேயே காதலி கடத்தல் - போலீஸ் எனக்கூறி ஏமாற்றிய மர்ம ஆசாமி கைது!

போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்துகொண்ட அந்த மர்ம நபர் பைக்கையும் இளம்பெண்ணையும் ஓர் இடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

Snehatara

பல்லடம் அருகே மாதப்பூரில் இரவு நேரத்தில் நின்றிருந்த காதலர்களிடம் போலீஸ் எனக்கூறி இளம்பெண்ணை கடத்திய மர்ம ஆசாமி கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதப்பூர் அருகே கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ராபர்ட்சன் என்ற வாலிபர் தனது 21 வயது காதலியுடன், ராமநாதபுரத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்வதற்காக பைக்கில் வந்து நின்றுள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் தன்னை போலீஸ் எனக் கூறிக்கொண்டு ராபர்ட்சன்னை மிரட்டி தன்னுடன் காவல் நிலையம் வருமாறு தனியாக அழைத்துக்கொண்டு போயுள்ளார். கோவை சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு வரை அழைத்துச்சென்று விட்டுவிட்டு ராபர்ட்சன்னிடமிருந்து பைக் சாவியை பறித்துக்கொண்டு மீண்டும் இளம்பெண் நிற்கும் இடத்துக்கே வந்து அப்பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடத்தல் வழக்கு சிசிடிவி காட்சி - பல்லடம்

இதுகுறித்து ராபர்ட்சன் பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட எஸ்பி ஷஷாங் சாய் உத்தரவின் பேரில் பத்து தனி படைகள் அமைக்கப்பட்டு இளம்பெண்ணை பைக்கில் கடத்திய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வந்தனர். மேலும் இளம்பெண் கையில் வைத்திருந்த செல்போன் எண்ணைக்கொண்டு மதுரை மாவட்டத்தில் பெண்ணுடன் மர்ம ஆசாமி இருப்பதை அறிந்துகொண்ட பல்லடம் போலீசார் மதுரை மாவட்ட போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்துகொண்ட அந்த மர்ம நபர் பைக்கையும் இளம்பெண்ணையும் ஓர் இடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இளம்பெண்ணை மீட்ட பல்லடம் போலீசார் பெண்ணின் பெற்றோரை பல்லடம் வரவழைத்து பத்திரமாக அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் காதலன் ராபர்ட்சன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலீஸ் எனக்கூறி காதலன் கண்முன்னே காதலியை கடத்திய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது திருப்பூர் வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த கணேசன்(30) என்பது தெரியவந்தது.

கடத்தல் வழக்கு - பல்லடம்

இதனைத் தொடர்ந்து போலீசார் கணேசனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தஞ்சாவூரில் இருந்து பேருந்தில் கணேசன் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் பல்லடத்தை அடுத்த பனப்பாளையத்தில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் பேருந்துகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தஞ்சாவூரில் இருந்து வந்த ஒரு பேருந்தில் கணேசன் வந்ததைக் கண்ட போலீசார், அவரை கைதுசெய்து பல்லடம் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இதேபோன்று மேலும் ஒரு கடத்தல் சம்பவம், இருசக்கர வாகன திருட்டு என 7 வழக்குகளில் தொடர்பிலிருப்பது தெரிய வந்தது. மேலும் கணேசனை கைதுசெய்த பல்லடம் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் எனக்கூறி காதலனிடமிருந்து காதலியை பிரித்து கடத்திச்சென்று மர்ம ஆசாமி கைதாகியுள்ள சம்பவம் பல்லடத்தில் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.