தமிழ்நாடு

ஏடிஎம் வரும் முதியவர்களை குறிவைக்கும் மோசடி நபர்: சிக்கியது எப்படி? (வீடியோ)

ஏடிஎம் வரும் முதியவர்களை குறிவைக்கும் மோசடி நபர்: சிக்கியது எப்படி? (வீடியோ)

Sinekadhara

சென்னையில், ஏடிஎம் மையத்திற்கு வரும் முதியவர்களுக்கு உதவி செய்வதாக கூறி நடித்து ஏமாற்றிவந்த மோசடி நபர் சிக்கினார்.

எல்கேஜி பையன் ஆன்லைன் மூலம் செல்போனில் இருந்து பணம் அனுப்புகிறான். அதேநேரத்தில் வயதான முதியவர்கள் பலருக்கோ ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவி தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட நபர்கள்தான் மோசடிப் பேர்வழிகளின் கழுகுப் பார்வைக்கு இறையாகின்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 81 வயதான ஓய்வுப்பெற்ற ஆசிரியர் சதாசிவம் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு நபர் பேச்சுக்கொடுத்து பின்னர் உதவி செய்வதாக கூறியுள்ளார். ஆனால் பணம் வரவில்லை என அவர் கூறியதும் சதாசிவம் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் வங்கிக் கணக்கில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ந்த அவர் காவல்நிலையத்தில் முறையிட்டார். வழக்கம்போல சிசிடிவி உதவியுடன் சிக்கினார் உதவிக்கு சென்ற அந்த நபர்.

விசாரணையில், அவர் வளசரவாக்கத்தைச் சேர்ந்த இளையராஜா என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பணம் எடுத்துத் தருவதாகக்கூறி கார்டையும், பின் நம்பரையும் பெற்றுக்கொண்டு பின்னர் தான் தயாராக வைத்திருந்த போலி கார்டை கொடுத்து முதியவரை அனுப்பியுள்ளார். இதேபோல் வடபழனியிலும் ஒரு முதியவரிடம் மோசடியில் ஈடுபட்ட வளசரவாக்கம் நபர், தனது மோசடி திட்டத்தை பல கிளைகளுக்கு விரிவுப்படுத்தியுள்ளார். குறிப்பாக தேனி, திருச்சி, மதுரையில் கைவரிசை காட்டியது அம்பலமாகியுள்ளது. தற்போதைக்கு சென்னை முதியவர் சதாசிவத்திடம் ஏமாற்றிய 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர் போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதோடு, பணப்பரிமாற்ற விவகாரங்களில் விவரம் தெரியாதவர்களை குடும்பத்தினரை மட்டுமே உதவிக்கு வைத்துக்கொள்வது காலச்சிறந்தது.