பொள்ளாச்சி அருகே குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி 7 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் திருப்பூரில் நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகவும் பணத்தை எடுத்துக்கொண்டு பொள்ளாச்சி அருகிலுள்ள அம்பராம்பாளையம் வருமாறும் கூறியுள்ளார். இதை நம்பிய ஆரோக்கியராஜ் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்து கொண்டு அம்பராம்பாளையம் சென்றுள்ளார்.
அங்கு வந்தவர்கள் தங்கத்தை காட்டி அவரிடம் இருந்த பணத்தை வாங்கியுள்ளனர். அப்போது திடீரென போலீசார் எனக் கூறி அந்த கும்பல் அவரிடமிருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர். ஆரோக்கியராஜின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் பார்த்தசாரதியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணையில், குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி ஆரோக்கியராஜை ஏமாற்றி அவரிடமிருந்து பார்த்தசாரதி மற்றும் அவரது கூட்டாளிகள் பணத்தை பறித்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் பார்த்தசாரதியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.