பூந்தமல்லி அருகே தலை, கைகள் இன்றி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் எல்லை பிரச்னையால் வழக்கை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்திலிருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பை கிடங்கில் அவ்வப்போது குப்பைகள் எரிவது வழக்கம். இந்த நிலையில் இந்த குப்பைக் கிடங்கு அருகே சாலையின் ஒரம் தலை மற்றும் இரு கைகள் இல்லாமல் ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய 3 காவல்நிலைய போலீசாரும் வந்தனர். இந்நிலையில், சம்பவம் நடந்த இடம் எந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் வருகிறது என்பதில் போலீசாருக்கிடையே குழப்பம் ஏற்பட்டது. முடிவில் ஆவடி எல்லைக்குள் வரவில்லை என்பதால் ஆவடி போலீசார் சென்று விட்டனர்.
இதைத் தொடர்ந்து பூந்தமல்லி, திருவேற்காடு இரு காவல்நிலைய போலீசாரிடையே மீண்டும் எல்லை பிரச்னை ஏற்பட்டது. இதனால் இரு காவல் நிலைய போலீசாரிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இதற்கிடையே சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எரித்து கொலை செய்யப்பட்ட நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு தலை, கைகளை வெட்டி விட்டு இங்கு வந்து சடலத்தை மட்டும் எரித்துள்ளனரா, அல்லது குடி போதையில் தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக இந்த கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த சாலையோரத்தில் தலை மற்றும் கைகள் இல்லாமல் ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.