தமிழ்நாடு

“அடிப்படை வசதியுமின்றி அல்லல்” - விடியலுக்காக காத்திருக்கும் மலையூர் மலைக் கிராம மக்கள்

“அடிப்படை வசதியுமின்றி அல்லல்” - விடியலுக்காக காத்திருக்கும் மலையூர் மலைக் கிராம மக்கள்

நிவேதா ஜெகராஜா

நாடு சுதந்தரம் அடைந்து பவள விழாவே கண்டுவிட்டது. ஆனாலும் எந்தவித அடிப்படை வசதியுமின்றி தலைமுறை தலைமுறையாக அவதியடைந்து வரும் ஒரு மலைக் கிராமத்தின் அவலங்களை படம் பிடித்துள்ளது புதிய தலைமுறை. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் மலையூரில் எவ்வித வசதியும் கிடைக்காமல் இருக்கிறது.

இங்கு கடந்த கால திமுக ஆட்சியில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டிருந்திருக்கிறது. அந்த ஒரு தேவையை தவிர, வேறெந்த தேவையும் இவர்களுக்கு பூர்த்தி செய்யப்படவில்லை. மதுரை மாவட்டம் பாலமேட்டிலிருந்து பளபளக்கும் சாலையில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எல்லைப்பாறை பகுதி. அங்கிருந்து சுமார் 2 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள கரடுமுரடான மலை பாதையை மூச்சிறைக்க ஏறிச் சென்றால் எழில் மிகுந்த மலையூர் கிராமம் வந்துவிடும். சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த கிராமத்தில் இன்னும் கைகளால் இறைக்கும் கிணறுகள் தான் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கின்றன.

பெயரளவில் மட்டுமே அமைந்துள்ள தொடக்கப் பள்ளியின் சிதிலமடைந்த கட்டடங்களே இந்த கிராமத்தின் அவல நிலைக்கு சாட்சியாக உள்ளது. கல்வி, மருத்துவம், சாலை வசதி என எந்தவித அடிப்படை வசதியுமின்றி, தாங்கள் படும் இன்னல்களை அந்த கிராம மக்களே விவரிக்கிறார்கள். இதனால் அனைத்துக்கும் சுமார் 4 கி.மீ. மலையில் ஏறி இறங்கி அவதியடையும் அவலம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள், முதியோர்கள், அவசர சிகிச்சை தேவைப்படுவோரை 4 கிலோ மீட்டருக்கு தொட்டில் கட்டி கொண்டு செல்லும் நிலையும் இந்த கிராமத்தில் நீடிக்கிறது. விவசாயிகளின் நிலையோ இங்கு மேலும் பரிதாபகரமாக உள்ளது. விளைப் பொருட்களை சந்தைப்படுத்த போக்குவரத்துக்கே அதிக செலவாகிறது.

மலையூர் கிராமத்திற்கு கடந்த 1972ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போதே வெளிச்சம் பாய்ச்சப்பட்டதாக கூறும் மக்கள், முதலமைச்சருக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர். இந்த முறை நிச்சயம் விடியல் பிறக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் மலையூர் மலை கிராம மக்கள்.