தமிழ்நாடு

மலேசியா டூ தூத்துக்குடி: கண்டெய்னரில் கடத்தப்பட்ட போதைப் பொருள் பறிமுதல்

மலேசியா டூ தூத்துக்குடி: கண்டெய்னரில் கடத்தப்பட்ட போதைப் பொருள் பறிமுதல்

webteam

மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னர் மூலம் கடத்திவரப்பட்ட 10 டன் எடையுள்ள பாப்பி சீட் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக போதைப் பொருள் உள்ளிட்ட ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாப்பி சீட் என்னும் போதைப் பொருள் மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு கண்டெய்னரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அந்த கண்டெய்னரில் ஒயிட் சிமெண்ட் இருந்தது. அதற்கு பின்னர் ஈரம் புகாதவாறு பேக்கிங் செய்யப்பட்ட மூட்டைகளில் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட போதை பொருளான பாப்பி சீட் இருந்தது.

இதைத் தொடர்ந்து அந்த கன்டெய்னரில் இருந்த சுமார் 10 டன் எடையிலான பாப்பி சீட் எனப்படும் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பாப்பி சீட் மதிப்பு ரூ.1.75 கோடி என்று கூறப்படுகிறது.

இது குறித்து தூத்துக்குயில் இந்த கண்டெய்னரை இறக்குமதி செய்த ஷிப்பிங் நிறுவனம் யார் என்பது குறித்து மதுரையில் உள்ள இறக்குமதி நிறுவனத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.