தமிழ்நாடு

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு சளி, காய்ச்சல் - கோவையில் கொரோனா வார்டில் சிகிச்சை

webteam

மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நபருக்கு கோவை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மலேசியாவில் இருந்து அவர் திருச்சி விமான நிலையம் வந்தார். மலேசியாவில் இருந்து கிளம்பும் போது மாத்திரை எடுத்துக்கொண்டதால் அவரின் உடல்நலம் சீராக இருந்துள்ளது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில் அவருக்கு சளி, காய்ச்சல் இருந்தது அறியப்படவில்லை. இதைத்தொடர்ந்து திருச்சியிலிருந்து கேரள மாநிலம் திருச்சூருக்கு கிளம்பிய நிலையில், தனக்கு உடல்நலம் சரி இல்லாதது குறித்து குடும்பத்தினருக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.

ஆனால் குடும்பத்தினர் கேரளாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்ததையடுத்து, அந்த இளைஞர் செய்வதறியாது கோவையிலேயே அறை எடுத்து தங்கியுள்ளார். தொடர்ந்து சளி, காய்ச்சல் இருந்ததால் அவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் மலேசியாவில் இருந்து வந்தவர் எனத் தெரியவர உடனே கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சளி மாதிரிகளை எடுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம் பரிசோதனைக்காக சென்னை கிங்ஸ் இன்ஸ்ட்யூட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த மாதிரிகள் சென்னையிலிருந்து புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஈஎஸ்ஐ. மருத்துவமனை கொரோனா வார்டுக்கு இந்த இளைஞர் மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தங்கியிருந்த விடுதி அறை, விடுதியில் இருந்தவர்கள், சிகிச்சை எடுத்த செவிலியர்கள் என அனைவரும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

தற்போது அந்த இளைஞரின் உடல்நலம் சீராக உள்ளதாகவும், இருப்பினும் ரத்த மாதிரிகள் அறிக்கை பெறப்பட்ட பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தெரிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபர் வீட்டிலேயே சுகாதாரத்துறை கண்காணிப்பில் இருக்கிறார்.