தமிழ்நாடு

மதுரையில் பாடல் மூலம் விழிப்புணர்வூட்டும் 'மக்கா கலங்குதப்பா’ பாடகரும் காவலருமான பாலா!

மதுரையில் பாடல் மூலம் விழிப்புணர்வூட்டும் 'மக்கா கலங்குதப்பா’ பாடகரும் காவலருமான பாலா!

webteam

மதுரையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய மக்களுக்கு நாட்டுப்புறப் பாடகரும், முதல்நிலை காவலருமான ‘மதிச்சியம் பாலா’ பாடல் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தியது வெகுவாக கவர்ந்தது.

மதுரை மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், 10 மணிக்கு பின்னர் அத்தியாவசியம் இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிகளவில் பொதுமக்கள் வெளியே வருகின்றனர்.

இவ்வாறு வரும் மக்களிடம் தெற்கு வாசல் காவல்நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் முதல்நிலை காவலராக பணியாற்றும் 'மக்கா கலங்குதப்பா' பாடல் புகழ் மதிச்சியம் பாலா கொரோனோ குறித்த விழிப்புணர்வு பாடலை பாடினார். சக காவலர்கள் பொதுமக்களை கையெடுத்து கும்பிட்டு அறிவுரை வழங்கினர்.

கொரோனோ காலத்தில வீட்டை விட்டு வெளியே சுற்ற கூடாது, அரசு சொல்லும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாட்டுப்புற பாடலாக பாடி மதிச்சியம் பாலா விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.  ‘மக்கா கலங்குதப்பா' பாடல்’ விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ’தர்மதுரை’ படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.