தமிழ்நாடு

எம்பி பதவி கிடைக்காததில் வருத்தம் : மைத்ரேயன் 

எம்பி பதவி கிடைக்காததில் வருத்தம் : மைத்ரேயன் 

webteam

எதிர்பார்த்தப்படி மீண்டும் எம்.பி பதவி கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது என முன்னாள் எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

அதிமுக உள்பட 5 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதிமுக உறுப்பினர்கள் லட்சுமணன், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்னவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் நேற்று மாநிலங்களவையில் உரை நிகழ்த்தி விடைபெற்றனர்.

அப்போது பேசிய மைத்ரேயன், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். மேலும் அவர், “எனது தலைவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து 3 முறை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்தார். எப்போதும் அவர் மீது விசுவாசத்துடன் இருப்பேன். மேலும், எனக்கு வழிகாட்டியாக இருந்த அருண் ஜெட்லி விரைவில் உடல்நலம் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், மாநிலங்களவை முன்னாள் எம்.பி மைத்ரேயன் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக இரட்டை தலைமையில் சாதக பாதகங்கள் உள்ளன. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என நல்ல முறையில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் மாநிலங்களவை எம்.பியாக மீண்டும் தேர்வு செய்யப்படுவேன் என நினைத்தேன். அதுவும் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.