சென்னை காவல்துறையின் புதிய கமிஷனராக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1994-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலம் பத்திண்டா என்ற ஊரில் பிறந்தவர். 46 வயது நிறைந்த இவர் சட்டப்பிரிவில் பி.ஏ.பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப்படிப்பும் படித்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் புலமை வாய்ந்தவர்.
தேனியில் எஸ்பியாக பணியைத் தொடங்கிய மகேஷ்குமார் அகர்வால் சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன் பின்னர் சென்னை போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர், தூத்துக்குடி எஸ்பி ஆகிய முக்கிய பதிகளை வகித்தார். சண்டிகார் நகரில் சிபிஐயில் அதிகாரியாக 7 ஆண்டுகள் பணிபுரிந்த இவர் பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த முக்கிய வழக்குகளை புலனாய்வு செய்து அனுபவம் பெற்றவர்.
இதனையடுத்து தமிழக காவல்துறைக்கு திரும்பிய அவர் சிபிசிஐடி டிஐஜி, சென்னை நகர போலீஸ் கூடுதல் கமிஷனர் (தெற்கு), மதுரை போலீஸ் கமிஷனர், மீண்டும் சிபிசிஐடி, ஐஜி உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்தார். குறிப்பாக சென்னை நகர கூடுதல் கமிஷனராக இருந்த அகர்வால் முன்னாள் சென்னை கமிஷனர் விஸ்வநாதனின் கனவுத்திட்டமான சிசிடிவி கேமராக்களை சென்னை நகரில் நிறுவுவதற்கு வலது கரமாக செயல்பட்டார்.
சென்னை பூக்கடை துணைக் கமிஷனராக இருந்த போது ‘‘நைட் கிரைம் டு ஜீரோ’’ என்ற திட்டத்தை காவல்துறையில் அறிமுகப்படுத்தி இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தினார். இதன் மூலம் வடசென்னையில் குற்றங்கள் வெகுவாக குறைந்தன. மேலும் போக்குவரத்துப் பிரிவில் இருந்த போது சென்னை நகரில் முக்கிய சந்திப்புகளில் விபத்துக்கள் கணிசமாக குறைய வழிவகுத்தார். சிபிசிஐடி ஐஜியாக இருந்த போது சேலம் ரயில் கொள்ளை வழக்கு தொடர்பாக புலனாய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆபரேஷன்ஸ் பிரிவில் பணியமர்த்தப்பட்டார்.சென்னை நகரில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளில் ஒருவராக வடக்கு மண்டலத்திற்கு மகேஷ் குமார் நியமிக்கப்பட்டிருந்தார்.
சேலம் ரயில் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை கைது செய்த வழக்கு, இந்து தலைவர்கள் படுகொலை வழக்கில் 3 தீவிரவாதிகளை கைது செய்த வழக்கு, சிறுசேரி பெண் பொறியாளர் கொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்த வழக்கு, சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாதிகளை கைது செய்தது, வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தது, பொட்டு சுரேஷ் கொலை வழக்கு உள்பட முக்கிய வழக்குகளை திறம்பட கையாண்டு நன்மதிப்பை பெற்றவர். சிறப்பான பணிக்காக முதல்வரிடம் பதக்கமும் பெற்றுள்ளார்.