கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி சென்னை அசோக்நகர் அரசுப்பள்ளியில் மஹாவிஷ்ணு என்ற நபர் மாணவிகளுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துகளை கூறியுள்ளார். இவர் சைதாப்பேட்டை மாதிரிப்பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளில் ஒரேநாளில் பேசியுள்ளார்.
முற்பிறவி, பாவ, புண்ணியம், கர்மா என பிற்போக்கு கருத்துகளை பேசிய மஹாவிஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத்திறனாளியான ஆசிரியர் சங்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். செப்டம்பர் 5 மஹாவிஷ்ணு பேசிய பேச்சுகள் அவரது யூ ட்யூப் தளத்தில் வெளியான நிலையில் அதையொட்டிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதமானது.
மஹாவிஷ்ணுவின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அவரது பேச்சை கண்டித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை மேடையில் அமரவைத்து அவருக்கு ஆதரவாக பேசினார். தனது துறையில் உள்ள பள்ளிக்கு வந்து பிற்போக்கு கருத்துகளை கூறியதோடு இல்லாமல் ஆசிரியர் சங்கரை அவமதித்து பேசிய மஹாவிஷ்ணுவை சும்மா விடப்போவதில்லை என்றார்.
இந்நிலையில், அரசுப்பள்ளியில் மதரீதியில் பேசியதோடு, மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதிக்கும் வகையில் பேசியதால் மஹாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகார் அளித்தது. மஹாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை உள்ள திருப்பூரிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
மஹாவிஷ்ணு தலைமறைவானதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், சென்னை திரும்பியதும் விளக்கம் அளிக்கப்படும் என்றும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து இன்று பிற்பகலில் சென்னை விமானநிலையம் வந்த மஹாவிஷ்ணு காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். செய்தியாளர்கள் அனைத்து வழிகளிலும் குவிந்திருந்த நிலையில், மஹாவிஷ்ணுவை மாற்றுவழியில் காவல்துறையினர் அழைத்துச்சென்றனர்.
சைதாப்பேட்டை, அடையாறு என ஒவ்வொரு காவல்நிலையத்திலும் நமது செய்தியாளர்கள் இருந்த நிலையில், அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்? எங்கு வைத்து விசாரணை நடைபெறுகிறது? என்ற தகவல்கள் தெரியாமல் பரபரப்பாக நிமிடங்கள் நகர்ந்தன. இந்நிலையில், மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை அவதுறாக பேசிய மஹாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைதாகியுள்ள மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.