மகா விஷ்ணு pt web
தமிழ்நாடு

“என்ன சொல்லிவிட்டேன்.. நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்..” வீடியோ வெளியிட்டு மகா விஷ்ணு விளக்கம்

ஓடி ஒளிவதற்கான விஷயம் இல்லை. எதற்காக நான் ஓடி ஒளிய வேண்டும். ஓடி ஒளியக் கூடிய வகையில் என்ன தவறான கருத்தை சொல்லிவிட்டேன்.

PT WEB

சென்னை அரசுப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளிடையே மோட்டிவேஷன் எனும் பெயரில், மகா விஷ்ணு என்பவர் பிற்போக்குத்தன கருத்துகளை பேசியுள்ளார். அவர் திருக்குறள் கூறி உரையைத் தொடங்கினாலும், அதன் பிறகு மந்திர, தந்திரங்கள், பாவ, புண்ணியங்கள், முற்பிறவி என்று இஷ்டம்போல் பேச ஆரம்பித்தார்.

முற்பிறவி என்று பேசியபோது குறுக்கிட்ட ஆசிரியர் சங்கர், ஏன் பிற்போக்குத்தனமான கருத்துகளை மாணவிகள் மத்தியில் பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நீங்கள் சிஇஓவை விட பெரியவரா? என்றும், முற்பிறவியில் செய்த பாவத்தால்தான் தற்போது மாற்றுத்திறனாளியாக பிறந்திருப்பதாகவும் மஹா விஷ்ணு மனம் புண்படும்படி கூறினார். இந்த சமயத்தில் வேறு எந்த ஆசிரியரும் சங்கர் பக்கம் நின்று பேசாமல், சிறப்பு விருந்தினராக வந்த மஹா விஷ்ணுவை சமாதானம் செய்யும் வேளையில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வேகமாக பரவியது.

அசோக் நகர்

மகா விஷ்ணுவின் இந்த செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக எதிர்ப்புகள் கிளம்பியது. இத்தகைய சூழலில்தான் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காட்டமான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இதன்பின்னர் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அரசுத் தரப்பில் எடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மகா விஷ்ணு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “காலையில் இருந்து நிறைய தகவல்களையும் செய்திகளையும் என்னால் பார்க்க முடிகிறது. அதிகமானோர் போன் செய்து பேசி இருந்தீர்கள். சிலர் மெசேஜ் அனுப்பி இருந்தீர்கள். அதிகமான தகவல்களை தமிழ்நாடு ஊடகமெங்கும், இந்தியா ஊடகமெங்கும் பார்க்க முடிகிறது. இதில் அதிக தவறாக கருத்துகள் ஊடகங்களில் பேசப்படுவதை பார்க்க முடிகிறது.

மகா விஷ்ணு ஆஸ்திரேலியாவில் போய் ஒளிந்துகொண்டாரா என்ற கேள்விகளையும் பார்க்க முடிகிறது. அடிப்படையாகவே நான் இந்தியாவில் இருக்கக்கூடிய ஆள் கிடையாது. இந்தியா உட்பட 6 நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன. தொடர்ச்சியாக யோகா பயிற்சி வகுப்புகளையும் கொடுத்து வருகிறோம்.

அன்று காலை அசோக் நகர் பள்ளியிலும், சற்று நேரத்தில் சைதாப்பேட்டை பள்ளியிலும் நிகழ்ச்சி முடிந்த உடன் நான் ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். இதில் ஓடி ஒளிவதற்கான விஷயம் இல்லை. எதற்காக நான் ஓடி ஒளிய வேண்டும். ஓடி ஒளியக் கூடிய வகையில் என்ன தவறான கருத்தை சொல்லிவிட்டேன்.

சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் புகார் கொடுத்துள்ளனர். அதை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனரா அல்லது இன்னும் செய்யவில்லையா என தெரியவில்லை. பரம்பொருள் அலுவலகத்திலும் திருப்பூரில் உள்ள எனது இல்லத்திலும் காவல்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

நாளை மதியம் 1.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில்ன் வந்திறங்குவேன். தற்போதைய சூழலில் இந்தியாவில் இருப்பதையே நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.