கடந்த சில தினங்களுக்கு முன்பு சைதாப்பேட்டை அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் பேசிய மகா விஷ்ணு என்பவர், மாணவர்களிடையே அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கை கொண்ட கருத்துக்களை பேசி இருந்தார். இதில், மாற்றுத்திறனாளிகளை அவதூறுப்படுத்தும் நோக்கில் கருத்துக்களை தெரிவித்ததாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் சைதாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 7 ம் தேதி ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பிய விஷ்ணுவை சைதாப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விஷ்ணு மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, சமூகத்தில் வெறுப்பு கருத்துகள் பரப்புவது, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசுவது, மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட மகா விஷ்ணுவிற்கு, வருகின்ற 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். நீதிபதியின் தீர்ப்பை தொடர்ந்து விஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டடார்.
இந்தநிலையில், விஷ்ணுவின் பின்னனி குறித்து விசாரிக்க சைதாப்பேட்டை போலீசார் முடிவு செய்தனர். குறிப்பாக இவருக்கு பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? யாருடைய தூண்டுதலின் பேரில் விஷ்ணு பேசினார்? வேறு எங்கெல்லாம் இது போல முன் ஜென்மம் என்ற பெயரில் அவதூறு கருத்துகள் பேசியுள்ளார்? என்பது குறித்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைதாப்பேட்டை போலீசார் 7 நாட்கள் போலீஸ் கஷ்டடி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், போலீஸ் கஷ்டடி மனுதாக்கல் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதற்காக, மதியம் 12:10 மணியளவில் விஷ்ணு சைதாப்பேட்டை 4 வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியம் விஷ்ணுவை முறைப்படி கைது செய்து வாக்குமூலம் பெற்றுள்ளீர்கள்? பின்பு எதற்காக 7 நாட்கள் காவல் பாதுகாப்பு கேட்கிறீர்கள்? என போலீசாரிடம் கேட்டுள்ளார். காவல்துறையினர், காவலில் எடுப்பதற்குண்டான 4 காரணங்களைத் தெரிவித்துள்ளனர்.
அதில், மாற்றுதிறனாளிகள் குறித்து பேசியதற்கான காரணங்கள் மற்றும் பின்புலத்தில் யார் உள்ளனர்? என்பது குறித்தும், இதே போல பல வீடியோக்கள் பேசி இருப்பதால் அதை ஆய்வு செய்ய திருப்பூரில் உள்ள அவரது நிறுவனத்திற்கு செல்ல வேண்டும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
மேலும், பல வெளிநாடுகளுக்கு சென்று சொற்பொழிவாற்றி வந்ததால், அவரது வங்கி கணக்கை முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்த காவல்துறையினர், சொற்பொழிவு ஆற்றுவதற்கு மூல காரணமாக விளங்கியது யார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து நீதிபதி, 3 நாட்கள் போலீஸ் கஷ்டடி கொடுத்து உத்தரவிட்டுள்ளார். இதனிடையே போலீஸ் விசாரணைக்கு தான் முழுமையாக ஒத்துழைப்பு தர உள்ளதாகவும், அதனால் வழக்கறிஞர் தேவையில்லை எனவும் தானே தனது தரப்பை தெரிவிப்பதாகவும் மகாவிஷ்ணு கூறிய நிலையில் அவரது வழக்கறிஞர் பாலமுருகன் வழக்கிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் விஷ்ணுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.