தமிழ்நாடு

“தீரன்” பெரியபாண்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் : காவலர்கள் அஞ்சலி

“தீரன்” பெரியபாண்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் : காவலர்கள் அஞ்சலி

webteam

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த ஆய்வாளர் பெரியபாண்டிக்கு மதுரவாயல் காவல் நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை கொளத்தூரில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லக்ஷ்மி ஜுவல்லரி என்ற நகை கடையின் மேற்கூரையை உடைத்து 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி மற்றும் 2 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள் ராஜஸ்தானில் இருப்பதாக தெரியவந்தது. இதனை அடுத்து கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை 2017ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தான் சென்றது. 

அங்கு பாலி மாவட்டத்தில் உள்ள செங்கல் சூலையில் கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ் சவுத்ரி, பக்தாராம் பதுங்கிருப்பதை கண்டறிந்த தனிப்படை காவல்துறையினர் அங்கு சென்றனர். அவர்களை கைது செய்ய முற்பட்டபோது, கொள்ளையகளுக்கும் காவல்துறையினர் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆய்வாளர் முனிசேகர் தனது துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பெரியபாண்டி மீது பட்டது. இதில் பெரியபாண்டி உயிர் இழந்தார்.

இந்நிலையில் அவர் உயிர் இறந்து ஒராண்டு நிறைவடைந்ததையொட்டி பெரியபாண்டியின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம், மூவிருந்தாலிகு துணை ஆணையர் சுதாகர், காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மற்றும் துணை ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் குழுவினர் பெரியபாண்டியன் நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பெரிய பாண்டியன் வீட்டினருக்கு ஆறுதல் கூறிய அவர்கள், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வந்தான் கொடுத்த கல்வெட்டையும் பெரியபாண்டியன் நினைவாக அங்கு பதித்தனர். அதனை துணை ஆணையர் திறந்து வைத்தார். பின்னர் பெரியபாண்டியன் நினைவாக ஊர்மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அதனை காவல்துறையினரே பரிமாறியுள்ளனர்.

இதுமட்டுமின்றி பெரியபாண்டியன் கடைசியாக பணியாற்றிய மதுரவாயல் காவல் நிலையத்தில் பெரியபாண்டிக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு துணை ஆய்வாளர்கள் பரத் மற்றும் செல்லதுரை தலைமையிலான காவலர்கள், காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியபாண்டியன் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

அவர்களை தொடர்ந்து சக காவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் நினைவு அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்கு ஆதரவில்லா குழந்தைகளுக்கு மதிய உணவு  வழங்கப்பட்டுள்ளது.