தமிழ்நாடு

மதுரவாயல்: குப்பைக் காடான சுடுகாடு; சடலங்களை அப்புறப்படுத்த முடியாமல் திணறும் ஊழியர்கள்

மதுரவாயல்: குப்பைக் காடான சுடுகாடு; சடலங்களை அப்புறப்படுத்த முடியாமல் திணறும் ஊழியர்கள்

நிவேதா ஜெகராஜா

சென்னை மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட அடையாளம்பட்டு ஊராட்சி பகுதியிலுள்ள சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்து அங்கு டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு சடலங்களை எரிக்கமுடியாத, புதைக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகள் அதிகமாக குவிவதால் நோய்ப்பரவும் அபாயமும் அதிகமாக இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட அடையாளம்பட்டு ஊராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இறப்பவர்களுக்கென மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சர்விஸ் சாலை அருகில் சுடுகாடு பகுதியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சுடுகாடு பகுதிக்குவரும் சிலர் தங்களை ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் என அறிமுகப்படுத்தி, பேட்டரி வாகனம் மற்றும் டிராக்டர் மூலமாக  டன் கணக்கில் குப்பைகளை கொண்டு வந்து  தினந்தோறும் கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் இறப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கும் எரிப்பதற்க்கும் இடம் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குப்பைகள் மலைப்போல் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத சில நபர்கள் அதனை தீயிட்டு கொளுத்தி விடுவதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்து அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் கண்ணெரிச்சல் உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். துறைசார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அப்பகுதி எம்.எல்.ஏ ஆகியோர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, ஆக்கிரமிப்பு செய்து கொட்டப்படும்  குப்பைகளை அகற்றி சுடுகாட்டை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள் அவர்கள்.

இதுகுறித்து புதிய தலைமுறை சார்பில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது குப்பைகளை கொட்ட முதல்கட்டமாக தடைசெய்யப்பட்டு, அங்கிருந்து கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்தி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். மேற்கொண்டு யாரேனும் அங்கு குப்பை கொட்டினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தும் இருக்கிறார் அவர்.

நவீன் குமார்