தமிழ்நாடு

பன்றிக்காய்ச்சலால் இறந்த தாய் : கலங்கி நிற்கும் பார்வையற்ற குழந்தைகள்

பன்றிக்காய்ச்சலால் இறந்த தாய் : கலங்கி நிற்கும் பார்வையற்ற குழந்தைகள்

webteam

மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியில் மீனாட்சி என்ற பெண் பன்றி காய்ச்சல் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு காய்ச்சல் சரியாகிவிட்டது, வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி, அவர் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் தனியார் மருத்துவமனைக்கு சென்று மீனாட்சி பரிசோதனைகள் செய்துள்ளார். அதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பன்றிக்காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சைப்பெற வேண்டும் என்று கூறியதால், மீனாட்சி மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 

பன்றிக்காய்ச்சலால் மீனாட்சி உயிரிழந்தது சோகமான சம்பவம் என்றால், அதனிலும் சோகமாக உள்ளது அவரது குடும்பநிலை. மீனாட்சி ஒரு ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். அவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து அப்பளம் தேய்த்தால் தான் அன்றாடம் பசியை போக்க முடியும். மீனாட்சிக்கு 4 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதில் இரண்டு குழந்தைகள் பார்வையற்றவர்கள். அவர்களுக்கு ஆதரவாகவும், அரவணைப்பாகவும் இருந்தவர் தாய் மீனாட்சி தான்.

பார்வையற்ற தன் குழந்தைகளை கண்போல் கவனித்து வந்துள்ளார் மீனாட்சி. இந்நிலையில் குடும்பத்தையே மீள முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது மீனாட்சியின் மரணம். தான் இருக்கும் வரை தன் குழந்தைகளை கலங்க விடமாட்டேன் என்று கூறிவந்த மீனாட்சி இன்று இல்லாமலே போய்விட்டார். அவரது இறப்பால் தற்போது அந்த குழந்தைகள் கலங்கி நிற்கின்றன. மீனாட்சி இறப்பு அவரது குழந்தைகளை மட்டும் அல்ல, அந்த பகுதி மக்களையே கலங்க வைத்துள்ளது.

சுகாதாரமற்ற சுற்றுச்சூழலும், சரியாக மூடப்படாமல் இருக்கு கால்வாய்களும் மீனாட்சி வசித்த குடியிருப்புகள் பகுதிகள் எங்கும் நிரம்பிக் காணப்படுகின்றன. அதனால் தான் அவருக்கு பன்றிக்காய்ச்சல் வந்ததாகவும், இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அப்பகுதி மக்கள் கலங்கியபடி கூறுகின்றனர். தாயின்றி தவிக்கும் அவரது குழந்தைகளுக்கு அரசு உரிய உதவிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். 

மீனாட்சி மட்டுமின்றி பன்றிகாய்ச்சல் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேலும் மூன்று பேர் தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற‌ர். இதுவரை அங்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக 83 பேரும், டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு எட்டு பேரும், பன்றி காய்ச்சலுக்கு நான்கு பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் புதுச்சேரியிலும் பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் 39 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.