சடலத்தை வயல்வெளியில் கொண்டு சென்ற அவலம் pt desk
தமிழ்நாடு

மதுரை: “மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை” - இறந்தவரின் சடலத்தை வயல்வெளியில் கொண்டு சென்ற அவலம்

மேலூர் அருகே இறந்தவரின் உடலை கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால், வயல்வெளியில் கொண்டு சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி ஊராட்சியில் உள்ள பாறைஅம்மாபட்டி கிராமத்தில், இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல உரிய பாதை வசதி இல்லாததால் உடலை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொடர்ச்சியாக மனு அளித்து வருகின்றனர்.

அரசு பேருந்தின் முன்பாக சடலத்தை சுமந்தபடி கண்டன குரல் எழுப்பிய கிராமத்தினர்

இந்த நிலையில், அப்பகுதியில் வசித்து வந்த முதியவர் ஒருவர் வயது மூப்பின் காரணமாக நேற்று உயிர் இழந்திருக்கிறார். இதையடுத்து அவரது உடலை நேற்று மாலை உறவினர்கள் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். அப்போது உடலை கொண்டு செல்லும் வழியில் வந்த அரசு பேருந்தின் முன்பாக சடலத்தை சுமந்தபடி சிறிது நேரம் கண்டன குரல் எழுப்பினர். இறந்வர்களின் உடலை கொண்டு செல்ல உரிய பாதை வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு வயல்வெளி வழியாக இறந்தவரின் சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்தனர். “நீண்ட நாட்களாக இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல சாலை வசதி கேட்டும் இதுவரை செய்து தரப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று அம்மக்கள் தெரிவித்தனர்.