உசிலம்பட்டி அருகே 400 ஆண்டுகள் பழமையான வளரி ஆயுதத்துடன் கூடிய வீரனின் நடுகல், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.கோட்டைப்பட்டி கிராமத்தின் அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நடுகற்கள் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிராமத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மரத்தடியில், வீரன் ஒருவன் தனது துணைவியாருடன் ஒரு கையில் ஈட்டி மற்றும் மற்றொரு கையில் வளரியுடன் இருக்கும் 3 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட நடுகல்லை கண்டறிந்தனர்.
பெரும்பாலும் தமிழர்களின் தொன்மையான ஆயுதம் என கருதப்படும் வளரி ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினரிடம் மட்டுமே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை போன்ற பகுதிகளில் கிடைத்த வளரி அந்தந்த பகுதியில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் உசிலம்பட்டி பகுதியிலும் வளரி ஆயுதம் பயன்படுத்தியதற்கான சான்றாக இந்த நடுகல் சிற்பம் காணப்படுவதாக தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.