வந்தே பாரத் ரயிலின் பயண நேரத்தைக் கையாள்வதற்காக மதுரை - சென்னை இடையே 46 வருடமாக இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேர அட்டவணையில் அக்டோபர் 1 முதல் மாற்றம் செய்துள்ளது தெற்குரயில்வே. கோவை, விழுப்புரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் 9 ரயில்களும் வந்தே பாரத் ரயிலுக்காக காத்திருந்து புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சென்னையையும் நெல்லை நகரையும் இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 24ஆம் தேதி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். 650 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 8 மணி நேரத்திற்குள் கடப்பதால் பலரும் இந்த சேவைக்கு வரவேற்பு தெரிவித்தனர். வரவேற்பு தெரிவித்த மூன்றாவது நாளுக்குள் அந்த வந்தே பாரத் ரயிலின் இயக்கத்தால் தெற்கிலிருந்து வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்காக ஏற்கெனவே பயணிகள் சேவையில் உள்ள வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தை மேலும் 15 நிமிடங்கள் அதிகரித்திருக்கின்றனர்.