தமிழ்நாடு

மதுரை: நாள்தோறும் ஹோட்டலுக்கு பரோட்டா சாப்பிட வரும் கோயில் காளை

மதுரை: நாள்தோறும் ஹோட்டலுக்கு பரோட்டா சாப்பிட வரும் கோயில் காளை

kaleelrahman

மதுரை விமானநிலைய சாலையில் உள்ள ஹோட்டலுக்கு நாள்தோறும் தவறாமல் புரோட்டா உண்ண கோயில் காளை ஒன்று வருகிறது.

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட பெருங்குடி பகுதியிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் தனியார் ஹோட்டல் நடத்தி வருபவர் முருகேசன். கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது ஹோட்டலுக்கு முன்பு, பெருங்குடி முத்தையா கோயில் காளை நின்று கொண்டிருந்தது. இதனைக் கண்ட உரிமையாளர் காளை மாட்டிற்கு பரோட்டா மற்றும் சப்பாத்தி ஆகியவற்றை கொடுத்துள்ளார்.

அதனை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்ற கோயில் காளை, தொடர்ந்து இந்த ஹோட்டலுக்கு வருவதை கடந்த ஆறுமாத காலமாக வாடிக்கையாக வைத்துள்ளது. தினசரி இங்கு வந்து ஹேட்டலுக்கு முன் நின்று உரிமையாளர் தனக்கு பரோட்டா தரும்வரை இடத்தைவிட்டு அசையாமல் காத்திருக்கிறது. தினந்தோறும் கோயில் காளை வருவதை புரிந்துகொண்ட ஹோட்டல் உரிமையாளர் முருகேசன் நாள்தோறும் அந்த காளைக்கு தனியாக 20 பரோட்டா தயார் செய்து கொடுத்து வருகிறார்.

கோயில் காளையின் இத்தகைய செயல் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையிலும், ஹோட்டல் உரிமையாளரின் மனிதநேய செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.