தமிழ்நாடு

சிறுமி மித்ரா நலம்பெற வேண்டி மதுரை மாணவி வரைந்த ஓவியம்; சமூக வலைத்தளங்களில் வைரல்

சிறுமி மித்ரா நலம்பெற வேண்டி மதுரை மாணவி வரைந்த ஓவியம்; சமூக வலைத்தளங்களில் வைரல்

kaleelrahman

சிறுமி மித்ரா குணமடைய வேண்டி மதுரை மாணவி வரைந்த ஓவியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த, 2 வயதான பெண் குழந்தை மித்ரா 'ஸ்பைனல் மஸ்குலர் ஆட்ரோஃபி' என்ற அரியவகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டார். அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 16 கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் சிறுமி மித்ராவின் நிலையைக் கண்டு மனம் உருகிய பலர் நிதியுதவி அளித்தனர்.

இந்நிலையில் சிறுமியின் சிகிச்சைக்கு தேவையான 16 கோடி ரூபாய் நிதி கிடைத்த நிலையில் மித்ராவுக்கு அளிக்கப்பட உள்ள மருந்தை இறக்குமதி செய்ய கூடுதலாக 6 கோடி ரூபாய் தேவைப்பட்டது. அதை திரட்ட முடியாத பெற்றோர் வரிவிலக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மித்ராவுக்கான மருந்தை இறக்குமதி செய்வதற்கான வரியை ரத்து செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி சிறுமி மித்ரா பூரண நலம் பெற வேண்டி #SaveMithra என்ற ஹேஷ்டேக்குடன் சிறுமி மித்ராவின் புகைப்படத்தை வரைந்துள்ளார்.

சிறுமி மித்ராவின் சிகிச்சைக்குரிய மருந்துக்கு வரிவிலக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி எனவும், சிறுமி விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்தார். கீர்த்திகா வரைந்த இந்தப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.