தமிழ்நாடு

மதுரை: படியில் பயணம் நொடியில் மரணம் - பதாகையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்

மதுரை: படியில் பயணம் நொடியில் மரணம் - பதாகையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்

kaleelrahman

மதுரையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் பதாகை ஏந்தியும், மாணவர்களிடம் எடுத்துரைத்து சமூக ஆர்வலர் விழப்புணர்வை ஏற்படுத்தினார்.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும், மாணவ, மாணவிகள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் தொங்கியபடியும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டிலோ அல்லது ஆபத்தான முறையிலோ பயணம் செய்யக்கூடாது என காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மாணவர்களை அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மதுரை செனாய் நகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தன்னார்வலருமான அசோக்குமார் என்பவர், மதுரை தவிட்டுச்சந்தை பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி அருகில் படிக்கட்டில் ஆபத்தான பயணம் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேருந்து படியில் பயணம், நொடியில் மரணம் எனவும், தாய், தந்தையை நினை, படிக்கட்டு பயணத்தை மற என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி தனது மகன் சுதர்சனுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பள்ளிக்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று அரசு பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கிச் சென்ற மாணவர்களை பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தினார். சமூக ஆர்வலரின் இச்செயல் பல தரப்பினரின் பாராட்டுதலை பெற்றுள்ளது.